கட்டுரை

ஆட்சியில் பங்கு! இல்லேன்னா சங்கு?

Staff Writer

தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியப்படவே படாது என்கிறீர்களா? இருங்க. அவசரப்படவேண்டாம்.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிமுக - திமுக போல எதிர் அணியில் நின்று வெறுப்பு அரசியல் நடத்திக்கொண்டிருந்த லாலுவும் - நிதிஷ்குமாரும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு இப்போது நிதிஷ்குமார் பிகாரில் முதல்வராக இருக்கிறார்.

அவரது ஆட்சியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் பங்கேற்று இருக்கிறது. லாலுவின் இரண்டு மகன்கள் அமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நடக்கும் என்று யாராவது கனவில் கூட யோசித்துப் பார்த்திருப்பார்களா? இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பது பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்துவருகிறது. மேற்குவங்கமும் கேரளமும் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களே. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரைக்கும் கூட்டணி ஆட்சி என்று ஒன்று அமைந்ததே இல்லை.

திமுகவும் சரி; அதிமுகவும் சரி; தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளித்ததே கிடையாது. அதற்கான அவசியமும் அவற்றுக்கு பெரிதாக ஏற்படவும் இல்லை. ஏனெனில் அவை பெரும்பாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெறும்பான்மை இடங்களைப் பெற்றுவிடுகின்றன. அது கிடைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அவை போட்டியிடுவதே வழக்கம். ஆனால் 2006 தேர்தலில் மட்டும் அப்படி அமையவில்லை.

திமுக கூட்டணி மிகவும் பெரியதாக அமைந்தது. காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி எஞ்சி இருந்த இடங்களில்தான் திமுக போட்டியிட்டது. அவை போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை இவ்வாறு அமைந்தது.

திமுக -130, காங்கிரஸ் 48, பாமக - 31 சிபிஎம் - 13, சிபிஐ -10, (ஐயூ எம் எல் - திமுக சின்னத்தில் இரண்டு இடங்கள்). அந்த தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டிருந்தது. மதிமுக கடைசி நேரத்தில் அதிமுக அணியில் சேர்ந்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக அணியில் இடம்பெற்றிருந்தது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி(அதிமுக -182, மதிமுக - 35, விசி - 9) தோற்றாலும்கூட 69 இடங்களைப் பெற்றது. அது அக்கட்சியின் உள்ளார்த்த வாக்கு வங்கியைக்(அதிமுக 61 இடங்கள்) காட்டுவதாக அமைந்தது. வெற்றிபெற்றபோதும் திமுகவுக்கு தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை. குறைவான இடங்களில் போட்டியிட்டதால் அது 96 இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது.

ஆனாலும் பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி கள் திமுகவுக்கு ஆள்வதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. ஆட்சியில் பங்கு பெறவில்லை. அறுதிப்பெரும்பான்மைக்கு(117 இடங்கள்) 21 இடங்கள் குறைவாக இருந்தபோதும் திமுக தனியாகவே ஆட்சி செய்தது. 34 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கொஞ்சம் முனகினாலும் புதுடெல்லி காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்துவந்த திமுக அவர்களை எளிதில் சமாளித்து வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை ஓட்டிவிட்டது. ஜெயலலிதா இந்த சூழலைப்பயன்படுத்தி திமுகவை மைனாரிட்டி திமுக அரசு என்றே கிண்டல் செய்துவந்தார். இவ்வாறு தமிழ்நாட்டில் கூட்டணிக்கட்சிகள் ஆட்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு உருவானது 2006 சட்டமன்றத் தேர்தலில்தான். ஆனாலும் அது நிகழவில்லை. 2011 தேர்தலில் திமுக, சென்ற தேர்தலைவிட மேலும் குறைவான இடங்களில்தான்(119 இடங்கள்) போட்டியிட முடிந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சி இம்முறை மிகக்கடினமாக பேரம்பேசி 63 இடங்களை வாங்கிக் கொண்டுவிட்டது. பாமக மட்டுமல்லாமல் விசிக, கொ.மு.க. போன்ற கட்சிகளும் திமுக கூட் டணிக்கு வந்ததால் எல்லோரையும் திருப்திபடுத்த இடங்களைக் கொடுக்கவேண்டி இருந்தது.

தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அதிமுக நின்றது. சென்ற தேர்தலில் 182 இடங்களில் நின்ற அதிமுக இந்த தேர்தலில் 160 இடங்களில்தான் போட்டியிட்டது.(அதிமுக 160, தேமுதிக 41, சிபி எம் 12, சிபிஐ 10, மமக 3, பு.த, 2 பார்வர்ட் பிளாக் &1) ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தபோது அதிமுக 150 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. தேமுதிக 29 இடங்களில் வெற்றி. திமுகவோ மேலும் தேய்ந்து 23 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும்கூட இழந்துவிட்டது. மொத்தமாக அந்த கூட்டணி வென்றது 29 இடங்கள்தான். தனிப்பட்ட முறையில் திமுக தலைவர்களிடம் பேசு கையில், காங்கிரசுக்கு அதிக இடங்களைக் கொடுத்தது தவறாகிவிட்டது. இன்னும் கூடுதலான இடங்களில் திமுக நின்றிருந்தால் கூடுதலாக வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்திருக்கலாம் என்றனர். கடந்த இரண்டு தேர்தல்கள் சொல்வது இதுதான். திமுக வென்றபோது அதனால் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை.

தோற்றபோதோ எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை. அதிமுக தோற்றபோதும் கௌரவமான இடங்களைப் பெற்று தோற்றது. வென்றபோது அசுரபலத்துடன் இடங்களைப் பெற்று, அதற்கு உதவிய கட்சிகளை இம்மிக்கும் மதிக்கத் தேவையில்லாத அந்தஸ்தைப் பெற்றது. தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகவும் சட்டமன்றத் தேர்தல்களில் மாறிமாறி வெற்றிபெறுவதுதான் கடந்த கால்நூற்றாண்டு வரலாறு. இந்த வரிசைப்படி பார்த்தால் திமுக வெற்றி பெறவேண்டும். இம்முறை அதன் வியூகம் எப்படி அமையவேண்டும்? 2006 தேர்தலில் போட்டியிட்டதைப் போல 130 இடங்களில் போட்டியிடுவதா? 2011 தேர்தலைப் போல வெறும் 119 இடங்களில் மட்டும் போட்டியிடுவதா? இரண்டு எண்களுமே பெரும்பான்மை பலம் பெறுவதற்குப் போதுமானவை அல்ல. இருப்பினும் கூட்டணி பலமே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கத் தேவையாக இருப்பதால் கருணாநிதி குறைவான இடங்களில் போட்டியிடும் அபாயகரமான முடிவை எடுத்தார். முதல்முறை வென்றார். இரண்டாம் முறை தோற்றார். எப்படியும் இந்தமுறை காங்கிரஸ், தேமுதிக

இருகட்சிகளுடன் திமுக கூட்டணி உறுதி என்று வைத்துக்கொள்வோம். இந்த இருகட்சிகளுக்கும் சேர்த்து குறைந்தது 100 இடங்களை திமுக தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்பது எளிய எதார்த்தம். சுமார் 130 இடங்களில்தான் திமுக நிற்க வேண்டிருக்கும். மக்கள் நலக்கூட்டணி என்ற ஒரு அணி தனியாக நிற்கிறது. பாமக தனியாக நிற்கிறது. பாஜக தனியாக நிற்கிறது என்கிற நிலையில் அதிமுகவும் தனக்கு தேவையான உதிரிக்கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கிறது என்கிற ஒரு நிலை உருவாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 130 இடங்களில் திமுக நின்று 117 இடங்களைப் பெற்றுவிட முடியுமா? மிகவும் கடினமே. கடந்த தேர்தலைப் போல் அதிமுகவும் ஏராளமான இடங்களை வெல்ல இயலாது. இந்த முறை அதற்கு இருக்கும் அதிருப்தி வாக்குகள் அது வெல்லும் இடங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் 2006 - ல் 60 இடங்களைப் பெற்ற அதிமுக இந்த தேர்தலில் அதைவிடக் குறைவாகப் பெற்று தோல்வி அடையும் சூழ்நிலை இருக்கிறதா?

தோற்றாலும் கணிசமான இடங்களை அதிமுக அணி வென்றே தீரும். ஏனெனில் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் நிற்பது பெரும்பாலும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதற அடிக்கச் செய்யும் என்பதே பெரும்பாலான அரசியல் விமர்சகர்களின் கருத்து. பாமக சென்ற இரண்டு தேர்தல்களிலும் திமுக அணியில் இருந்தது. இப்போது தனியாக நிற்க முடிவு செய்திருக்கிறது. அது எவ்வாறு வாக்குகளைப் பிரிக்கும். அதனால் அதிமுக பாதிக்கப்படுமா திமுக பாதிக்கப்படுமா என்று கணிப்பது கடினம். இந்த இதழ் வெளிவரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் நிலவரம் இதுதான். பெரும் அலை எதுவும் உருவாகும் வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரியவில்லை. எந்த அணி வென்றாலும் அசுரபலத்துடன் வெல்லும் வாய்ப்புகள் இல்லை. ஆட்சி அமைக்கவும்,. நடத்தவும் பிறகட்சி களின் ஆதரவு தேவைப்படும். 2006லேயே இந்த சூழலை திமுக சந்தித்துவிட்டது. இந்த சூழலை எதிர்கொள்ள அது மனதளவில் தயாராகவே இருக்கும் கட்சிதான்.

அதிமுகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டால் அது மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படுமா? இது மிகவும் கற்பனையான சூழ்நிலை. தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஒரு பக்கம் சார்ந்து முடிவெடுப்பவர்கள். தெளிவான முடிவையே தரும் விதத்தில் வாக்களிப்பார்கள் என்று இனியும் சொல்ல முடியாது. 2006லேயே அவர்களால் அப்படி முடிவெடுக்க முடியாமல்தான் அதிமுக அறுபது இடங்கள் வென்றது. திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கு மாற்றான ஒரு அரசியல் கட்சி வேண்டும். புதிய தலைமை வேண்டும் என்றொரு குரல் சமீபகாலமாக ஓங்கி ஒலிப்பதைக் காணலாம். இது அரசியல் களத்தில் ஒரு வறட்சியும் குழப்பமும் நிலவுவதைக் காண்பிக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது குடும்ப ஆட்சி, 2ஜி ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளால் திமுக பாதிக்கப்பட்டிருந்தது. 2016 தேர்தலையொட்டி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் எதிரொலிகள் ஓய்ந்துவிடவில்லை. ஐந்தாண்டு ஆட்சியில் நடந்த பல்வேறு குளறுபடிகளும் வெள்ளத்தில் சென்னை தத்தளித்ததும் எதிரொலிக்கும்.

திமுகவோ அதிமுகவோ வழக்கமான நடைமுறையைத் தாண்டி அதிரடியாக ஏதாவது புதிய முடிவுகளை அறிவிக்காவிட்டால் இந்த தேர்தல் இழுபறித் தேர்தலாக அமையவே வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே முன்னெப்போதும் இல்லாத விதத் தில் நாங்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று மக்கள் நலக் கூட்டணி செயல்திட்டம் அறிவித்திருப்பதை மறந்துவிடவேண்டாம். இதற்கு விதைபோட்டு செயல்படுத்தியிருப்பவர் வி.சி. கட்சியின் திருமாவளவன். ஆட்சியில் பங்குதருகிறேன் என்று முன்கூட்டியே அறிவித்து வலிமையான கூட்டணியை அமைக்க திமுகவும் சரி; அதிமுகவும் சரி அமைக்கும் காலம் உருவாகுமா?

சென்ற தேர்தலில் தாங்கள் அமோக வெற்றிபெறக் காரணமாக அமைந்த தேமுதிகவுக்கும் ஓரிரண்டு அமைச்சர் பதவிகளை அதிமுக கொடுத்திருந்தால் என்ன குடிமுழுகிப் போயிருக்கும்? இதற்கு ஓர் உதாரணம் இப்போது டெல்லியில் ஆட்சி செய்யும் பாஜக அரசிலேயே இருக்கிறது. மத்தியில் சொந்த செல்வாக்கிலேயே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களையும் பெற்றிருப்பது காங்கிரசின் ராஜீவ்காந்தி காலத்துக்குப் பிறகு இப்போதுதான்.

மோடியின் பாஜக 282 இடங்களில் வென்றுள்ளது. ஆனாலும் கூட கூட்டணிக் கட்சி களான தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி, சிவசே னா, சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு மந்திரிசபையில் இடம் அளித்திருக்கிறார்கள். இரண்டே இரண்டு வென்ற ராஷ்ட்ரியா லோக் சமதா கட்சிக்கும் இந்த மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான குரலை ஏற்கெனவே மக்கள் நலக்கூட்டணி எழுப்பிவிட்டது. பிறகட்சிக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது ஆட்சியில் பங்கு என்ற குரலும் இம்முறை எழுப்பப்படும். அதிமுக பக்கம் கேட்கிறார்களோ இல்லையோ திமுக பக்கம் கூட்டணி உடன்படிக்கை வைக்கும் கட்சிகள் கேட்கக்கூடும் என்றே தெரிகிறது. பார்க்கலாம்!

பிப்ரவரி, 2017.